Wednesday, August 1, 2018

என் முதல் பயணக்கட்டுரை

பழைய மகாபலிபுரம் சாலையிலுள்ள அலுவலகத்தில் இருந்து அடித்துப் பிடித்து ஐந்தரை மணிக்குக் கிளம்பி வழக்கமான பாதையில் கண்ட வாகன நெரிசலுக்கு அஞ்சி முக்கிய சாலையில் என் ஈருருளியைத் திருப்பி சமிக்ஞை யைக் கடந்து ஆடை கூட மாற்றாமல் வீட்டைப் பூட்டிக் கிளம்பி தாம்பரம் இருப்பூர்தி நிலையத்தில் வந்து ஈருருளி நிறுத்தம் தேடி அலைந்து திரிந்து கண்டுபிடித்து வண்டியை விட்டு விட்டு உறுதிச்சீட்டு பெற்றுக்கொண்டு வேர்க்க விறுவிறுக்க பயணச்சீட்டு அலுவலகத்தை நாடிப் பயணச்சீட்டும் பெற்றுக் கொண்டு படியேறி வருகையில் நடைமேடை இரண்டிலிருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின் தொடரி இன்னும் சில மணித்துளிகளில் புறப்படும் என்ற அறிவிப்பு வந்தது.
ஓட்டமும் நடையுமாகச் சென்று ஓரளவு கூட்டம் இருந்த பெட்டியில் ஏறிக்கொண்டேன்.
வண்டி செல்லும் வழியே அமர இடமில்லாமல் எதிர்த்திசையில் அமர்ந்து ஒவ்வொரு நிலையத்தின் பெயரையும் எழுத ஆரம்பித்தேன். எதிர் இருக்கையில் இருந்த நண்பர் சைதாப்பேட்டையில் இறங்க அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டு மீண்டும் எழுதத் தொடங்கினேன். எழும்பூர் வந்ததும் என் மடிக்கணினி பையை தோளில் மாட்டிக்கொண்டு வாயிலருகே வந்து நின்றேன்.
வேளச்சேரி கடற்கரை வழித் தொடரியைவிட இதில் கூட்டம் குறைவு தான்.
பூங்கா நிலையமும் வந்து விட்டது. காலை நடைமேடையில் வைத்தது தான் தெரியும். கூட வந்தோரே என்னைப் புரசைவாக்கம் சாலையில் விட்டனர். சிறிது யோசனைக்குப் பின் சுரங்க பாதை வழியே இறங்கினேன். இச்சமயம் புறநகர் இருப்பூர்தி நிலையத்தில் விட்டனர்.
நிலைய வாசலிலேயே சில்லென்ற காற்று. எனக்கு மிகவும் பிடித்த திருஅல்லிக்கேணி ரத்னா உணவகத்தின் சாம்பார் இட்லி, சாம்பார் வடை சாப்பிட்டு விட்டு சென்னை வடித்த குளம்பி குடிக்கலாம் என்று இருந்த எனக்கு பேரதிர்ச்சி.
ஒரு தனியார் உணவகமுமில்லை. சுதாரித்துக்கொண்டு அரசு உணவகத்திலேயே இரண்டு நெய் தோசையும் ஒரு உளுந்து வடையும் சாப்பிட்டு விட்டு அந்த காகித தட்டிலேயே கையைத் துடைத்துக் கொண்டு ஒரு குளம்பி வாங்கி உறிஞ்சி விட்டு குழாயில் கை கழுவி விட்டு ஏழாம் நடைமேடையை நான் அடையவும் நான் செல்ல வேண்டிய பாலக்காடு விரைவிருப்பூர்தி வரவும் சரியாக இருந்தது.
வேக வேகமாக எனது பெட்டி இருந்ந இடத்தை நானடைந்த போது நன்றாக வேர்த்து இருந்தது. நல்ல வேளையாக அங்கே ஓர் இருக்கை மின் விசிறிக்குக் கீழே இருந்தது. சற்று நிம்மதி அடைந்தேன்.

No comments: