Saturday, December 29, 2018

இளையவன்
நீயென் உச்சி முகர்ந்த
வேளையில் நனைந்தது - என்
நெற்றியாயினும் ஞெகிழ்ந்ததென்னவோ
என் நெஞ்சம்தான்...!

Monday, October 8, 2018

நீ இல்லாத உலகத்திலே

களிநயம் மிக்க
கவிதையும் வெற்றுச் சொல்தான் - நீ
இல்லாத உலகத்திலே...!
காலதர் வழிப்
புறாக்களின் காதலும்
சாலைகளில் இறைந்து கிடக்கும் ஊர்திகளும்
ஒன்று போலத்தான் - நீ
இல்லாத உலகத்திலே...!
தேனினும் இனிய
சுவைகொண்ட பண்டங்களும்
கசந்தே சுவைக்கும்
உன் உமிழ்நீரிறங்காத - என்
அடிநாக்கில் - நீ
இல்லாத உலகத்திலே...!
மனதை மயக்கும் இசையும்
இறைச்சலாய்த்தான் - என் செவிபுகுந்தோடும் - நீ இல்லாத உலகத்திலே...!
ஆயிரம் சொந்தங்கள்
அரவணைக்க வந்தாலும்
யாருமற்ற தனிமைக்
குழந்தைபோலொரு வெறுமை வந்து வந்து
போகும் - நீ
இல்லாத உலகத்திலே...!

Tuesday, August 14, 2018

எரிகின்ற தீயில்
எண்ணெய்யை விட்டாற்போல்
கணிணி பார்த்துக்
கனன்ற - என்
கண்ணில் குத்தூசியாய்
வந்திரங்கியது
எதிர்ச்சாரல் மழை - இன்று..!

Thursday, August 9, 2018

மதுவும் இதழும்
போதையென்று
பாடியோர்க்குத் தெரியுமா
மழலைப் புன்னகை தான்
அதனினும் பெரிய போதையென்று?

Sunday, August 5, 2018

Pancha Boothangal

பூமி தொட்டவுடன் - நம்
பசிபோக்க அன்னை
தரும் பாலும் - நீர்...!
மகிழ்ச்சி, தூக்கம்
எது வரினும் - நம்
கண்கள் வடிப்பதும் நீர்..!
நம் முதலும் நீர்..!
முடிவும் நீர்...!
பிறக்கும் பச்சைக்
குழந்தையையும் தாங்குகிறது...!
குழிதோண்டி தன்னைத்
துன்புறுத்துவோரையும்
தாங்குகிறது..!
புல், பூண்டிலிருந்து
வானளாவிய கட்டிடங்கள்
வரையில் மௌனமாய்த்
தாங்குகிறது...!
அது மட்டுமா?
இத்தனையையும் தாங்கிக்கொண்டு
தன் நேர்பாதையை
மாற்றாமல் அமைதியாய்
ஆதவனைச் சுற்றுகிறது...!
வேண்டும்போது மழையும் வெயிலும்
மாறி மாறிக் கொடுத்து
மனிதனை மகிழ்வித்து
என் கடன் பணி
செய்து கிடப்பதே
என உதவுகிறது...!
நமக்குத் தேவையான
ஆக்சிஜனையும் கொடுத்து
நாம் வெளியிடும்
கொடூர மாசுகளையும் ஏற்று
அமைதியாய் உலவுகிறது..!
வீட்டிற்கு விளக்கேற்றவும்
பிணத்திற்குக் கொள்ளி போடவும்
ஆதி முதல் அந்தம் வரை உதவி
உன்னதமடைந்த அதிசயப் பிறவி..!
கொஞ்சம் சிந்தியுங்கள்...!
அற்ப மனிதர்கள் - நாம்
இவர்களை இவ்வாறு
துன்புறுத்தினால்
இவர்கள் பொங்கியெழுந்தால்..?

Wednesday, August 1, 2018

யாருமற்ற தனிமையை
ஒரு பொன்மாலைப்
பொழுதில் கழிக்க
எனக்குக் கிடைத்த
வரம் - மொட்டை மாடியில்
இளஞ்சூரிய ஒளியில்
வாசிக்கும் நூல்களே...!
வெந்து தணிந்தது காடு
என்று எழுதினான் பாரதி - அன்று...!
தணியாமலே வேகிறது என் வீடு - இன்று...!

என் முதல் பயணக்கட்டுரை

பழைய மகாபலிபுரம் சாலையிலுள்ள அலுவலகத்தில் இருந்து அடித்துப் பிடித்து ஐந்தரை மணிக்குக் கிளம்பி வழக்கமான பாதையில் கண்ட வாகன நெரிசலுக்கு அஞ்சி முக்கிய சாலையில் என் ஈருருளியைத் திருப்பி சமிக்ஞை யைக் கடந்து ஆடை கூட மாற்றாமல் வீட்டைப் பூட்டிக் கிளம்பி தாம்பரம் இருப்பூர்தி நிலையத்தில் வந்து ஈருருளி நிறுத்தம் தேடி அலைந்து திரிந்து கண்டுபிடித்து வண்டியை விட்டு விட்டு உறுதிச்சீட்டு பெற்றுக்கொண்டு வேர்க்க விறுவிறுக்க பயணச்சீட்டு அலுவலகத்தை நாடிப் பயணச்சீட்டும் பெற்றுக் கொண்டு படியேறி வருகையில் நடைமேடை இரண்டிலிருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின் தொடரி இன்னும் சில மணித்துளிகளில் புறப்படும் என்ற அறிவிப்பு வந்தது.
ஓட்டமும் நடையுமாகச் சென்று ஓரளவு கூட்டம் இருந்த பெட்டியில் ஏறிக்கொண்டேன்.
வண்டி செல்லும் வழியே அமர இடமில்லாமல் எதிர்த்திசையில் அமர்ந்து ஒவ்வொரு நிலையத்தின் பெயரையும் எழுத ஆரம்பித்தேன். எதிர் இருக்கையில் இருந்த நண்பர் சைதாப்பேட்டையில் இறங்க அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டு மீண்டும் எழுதத் தொடங்கினேன். எழும்பூர் வந்ததும் என் மடிக்கணினி பையை தோளில் மாட்டிக்கொண்டு வாயிலருகே வந்து நின்றேன்.
வேளச்சேரி கடற்கரை வழித் தொடரியைவிட இதில் கூட்டம் குறைவு தான்.
பூங்கா நிலையமும் வந்து விட்டது. காலை நடைமேடையில் வைத்தது தான் தெரியும். கூட வந்தோரே என்னைப் புரசைவாக்கம் சாலையில் விட்டனர். சிறிது யோசனைக்குப் பின் சுரங்க பாதை வழியே இறங்கினேன். இச்சமயம் புறநகர் இருப்பூர்தி நிலையத்தில் விட்டனர்.
நிலைய வாசலிலேயே சில்லென்ற காற்று. எனக்கு மிகவும் பிடித்த திருஅல்லிக்கேணி ரத்னா உணவகத்தின் சாம்பார் இட்லி, சாம்பார் வடை சாப்பிட்டு விட்டு சென்னை வடித்த குளம்பி குடிக்கலாம் என்று இருந்த எனக்கு பேரதிர்ச்சி.
ஒரு தனியார் உணவகமுமில்லை. சுதாரித்துக்கொண்டு அரசு உணவகத்திலேயே இரண்டு நெய் தோசையும் ஒரு உளுந்து வடையும் சாப்பிட்டு விட்டு அந்த காகித தட்டிலேயே கையைத் துடைத்துக் கொண்டு ஒரு குளம்பி வாங்கி உறிஞ்சி விட்டு குழாயில் கை கழுவி விட்டு ஏழாம் நடைமேடையை நான் அடையவும் நான் செல்ல வேண்டிய பாலக்காடு விரைவிருப்பூர்தி வரவும் சரியாக இருந்தது.
வேக வேகமாக எனது பெட்டி இருந்ந இடத்தை நானடைந்த போது நன்றாக வேர்த்து இருந்தது. நல்ல வேளையாக அங்கே ஓர் இருக்கை மின் விசிறிக்குக் கீழே இருந்தது. சற்று நிம்மதி அடைந்தேன்.
கோடை விடுமுறை முடிந்ததும்
குளிரடிக்க ஆரம்பித்து விட்டது
தண்ணீருக்கும்...!
முப்பதடித் தூரத்தில் கூட
மூச்சு முட்டச் செய்கிறது - மாலையில்
வெடித்த மல்லிகை மொட்டு...!
பகலெல்லாம் செங்கதிர் வெயிலில் 
வெந்த சாலை 
தலைமுழுகியது மாலையில்...!

மகனே

எவ்வளவு தான்
நாமிருவரும்
எதிரெதிர் நின்றாலும்
வலி புரியாத
உன் கண்ணீரில்
நானும் கரைந்து
தான் போகிறேன்...!
உன் மௌன
உதட்டசைவுகள்
சொல்கின்றன
ஆயிரமாயிரம்
கவிதைகளை...!
கெஞ்சிக் கேட்க
வாய் மொழியில்லை
வஞ்சனை வார்த்தைகள்
காதில் விழவில்லை
நல்லவை அல்லவை
நோக்க மனம்
சரியில்லை
மங்கையர் மாசற்று
வாழ இம்மண்ணில் - ஒரு
வழியில்லை..!

தேவதைகளே கவனம்

நீங்கள் கண்ணுறக்
கனியமுதாய் இருந்திட வேண்டாம்
தங்கள் தந்தையர்கூடக்
காமுறக் கூடும்...!
தேவதைகளே கவனம்...!
வெகுளி மனத்துடன்
வெளுத்ததெல்லாம் பாலென
இருந்திடவும் வேண்டாம்..!
பாட்டன் வயதினர்கூடப்
பாலுணர்வு கொள்ளக்கூடும்..!
தேவதைகளே கவனம்...!
நாகரிகம் என்ற பெயரில்
ஆடைகளைக் குறைத்திட வேண்டாம்..!
எதிர்ப்படும் ஆடவரெல்லாம்
ஆசை கொள்ளக்கூடும்...!
தேவதைகளே கவனம்...!
நல்லவனொருவன்தான் நண்பனென நம்பி
நடுவீதியில் நள்ளிரவு வரை உலவ வேண்டாம்...!
நஞ்சு கொண்ட பாம்பாய் - அவன்
நால்வருக்கு உன்னை விருந்தாக்கலாம்...!
தேவதைகளே கவனம்....!

Tuesday, July 31, 2018

சந்திர கிரகணம்

நீரணைந்த நிலவும்
நெருப்பாய் உலவும்
சிற்சில காலம்..!

சந்திர கிரகணம்

வெண்ணிற நிலவும் கூட
செக்கச்சிவந்து விடுகிறது
குற்றம் தந்த நாணத்தால்...!

மது

சொட்டு சொட்டாய்
என்னுள் நீ இறங்க
கெட்டுக் கெட்டுப்
போனதென் உறவும் உயிரும்...!

Sunday, July 15, 2018

புகைக்குழல்

இரு விரல்களில் - நான்
பிடித்தேன் உன்னை
உன் உயிர் பிரியும் வரை...!
நீயும் என்னை விடவில்லை
அணு அணுவாய் - என்
உயிரும் பிரியும் வரை..!

Wednesday, June 27, 2018

குதிரையின் பிடரி கூடத்
தோற்றுப்போகும் - உன்
குதிரைவால் கூந்தல் முன்னே...!

Friday, May 18, 2018

உன் நளினத்தில்
மயங்கி வாழ்த்த விழைந்தேன் - என்
குரலெட்டும் தொலைவில் - நீ
இருந்தும் அழைக்க
மனமின்றி பரிதவித்து
வந்தே விட்டேன் - நான்...!
மன்னிப்பாயா பேதைப்
பெண்ணே?

Monday, May 7, 2018

மழலையும் முதுமையும் ஒன்றுதான்
எலும்பும் தோலும்
போர்த்திய உடலில்...!
மழலையும் முதுமையும் ஒன்றுதான்
கேட்போர்க்குப் புரியாமல் பேசும்
பற்களற்ற வாயில்...!
மழலையும் முதுமையும் ஒன்றுதான்
தன்னிலை மறந்து
தவிக்கும் தனிமையில்...!

Friday, March 2, 2018

அன்றாடம் உழைத்து உண்பது அம்மாவிற்கு ஆனந்தம்
அவள் அரவணைப்பில் இருப்பது இம்மழலைகளுக்கானந்தம்...!

Sunday, February 4, 2018

முதல் காதல்

அவள் பார்த்த
காதல் பார்வையைப்
புரியாமல் விழித்து
நாணினான் - அவன்....!
அந்த பேதைப்
பெண்ணைக் கண்டிக்க
முடியாமல் புன்னகைத்து
வந்தேன் - நான்....!

Wednesday, January 17, 2018

நாணம்

என் பார்வை
தந்த தட்பம்
தாளாமல் நாணித்
தலை கவிழ்ந்தாள் - ஒரு
மெல்லிய புன்னகையோடு...!