Tuesday, September 14, 2010

கற்பு

விலைமாதுவிற்கும் இருக்கிறது
விற்காதவரை - அவள்
உடலோடு மனதையும்...!

Monday, May 17, 2010

வறுமை

கை நிறைய சம்பளம்
பேர் சொல்ல ஒரு பிள்ளை
இடி, மழை தாங்கும்
ஒரு வீடு
சொல்லிக்கொள்ள சொந்தங்கள் - பல
இருந்தும் - இல்லை
மனம்விட்டுச் சிரிக்க
ஒரு பொழுது..!

Tuesday, January 26, 2010

குடியரசைக் கொண்டாடுவோம்...!

பட்டம் படிக்கும்
காலத்திருந்தே எனக்குள்
ஓர் போராட்டம்
என் நாட்டிற்கு
ஏதேனும் நல்லது
செய்ய வேண்டும் - என்று!
என்ன செய்யலாம்? - என்
நாட்டைச் சுத்தப்படுத்தலாமா?
ஊழல் இல்லாத ஒன்றாய்...
என நினைத்தேன் - அது
நம் வேலையுமல்ல
நம்மால் இயலுவதுமல்ல
எனத் தெரிந்து - இனிவரும்
சுதந்திர, குடியரசு
தினங்களிலும்
இரத்த தானம் செய்வோம்
என சிந்தித்தேன்...
என் போறாதகாலம்
கல்லூரியை நான்விடும்
முன்பே புகையும் மதுவும்
புகுந்துகொண்டன என்னுள்
திருமணம் வரையில்
புகையை நான் விட்டேன்
புகை என்னை விடவில்லை
திருமணத்திற்குப் பின்பும்
மது மயக்குகிறது...
இன்றும் சுத்தமாய்த்தான்
யோசிக்கிறேன்
அமெரிக்காவில்...!
வெட்கக்கேடு - நானும்
ஓர் இந்தியன்!

Saturday, January 23, 2010

சுகவரி

ஆடை கலையாமல்
கூடிக் கலக்காமல்
தோள் சாய்ந்து
கட்டிக் கொள்ளுதல் - கூட
சுகம்தான் - காதல்
கரை கடந்தால்...

Thursday, January 14, 2010

பொங்கலோ பொங்கல்!

விவசாயம் மட்டுமே
தொழிலாய்ப் பார்த்த - நம்
முன்னோர்கள் - உழவுத்
தொழிலுக்கு உதவிய
கதிரவனுக்குக் காணும்
பொங்கலாய் - தை முதல்
நாளில் மங்கள மஞ்சள்
சூழ - கற்கண்டினும் இனிய
கருங்ககரும்பும் - தன்
அடி முதல் நுனி வரை
உதவும் வாழையையும்
வைத்து
அறுவடை செய்த புது அரிசி
குத்தி - மார்கழி கோலத்தில்
மணந்த சாணமும் பூசணியும்
இட்டு - அதிகாலை நேரத்தில்
ஆதவனை உள்ளம் குளிர்வித்து
துயில் எழுப்பி - அவன்
இன்முகம் நோக்கி மகிழ்ந்து
இரண்டாம் நாளில் - ஏர் சுமந்து
விதை விதைத்த எருதுகளை
குளிப்பாட்டி புது வண்ணம் இட்டு
பொங்கல் ஊட்டி துள்ளி திரிய
வைத்து
மூன்றாம் நாளில் - முந்தைய
தினங்களின் சோர்வு நீங்க
உறங்கி ஊர் சுற்றி
காளையர் கன்னியர்
கண் நோக்கி காதல்
கொண்டு பூப்பறிக்கும்
திருவிழா பார்த்து மகிழ
வைத்த திருவிழாவை
இன்று நாம் இணையத்தில்
மட்டும் வைத்து
இதயத்தில் இருந்து தொலைத்து
நாமும் கொண்டாடுகிறோம்
தமிழர் திருநாள்..! - அந்த
வரையில் நாம் இன்னும்
தமிழர்கள் தான்...!
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்..!