Tuesday, January 26, 2010

குடியரசைக் கொண்டாடுவோம்...!

பட்டம் படிக்கும்
காலத்திருந்தே எனக்குள்
ஓர் போராட்டம்
என் நாட்டிற்கு
ஏதேனும் நல்லது
செய்ய வேண்டும் - என்று!
என்ன செய்யலாம்? - என்
நாட்டைச் சுத்தப்படுத்தலாமா?
ஊழல் இல்லாத ஒன்றாய்...
என நினைத்தேன் - அது
நம் வேலையுமல்ல
நம்மால் இயலுவதுமல்ல
எனத் தெரிந்து - இனிவரும்
சுதந்திர, குடியரசு
தினங்களிலும்
இரத்த தானம் செய்வோம்
என சிந்தித்தேன்...
என் போறாதகாலம்
கல்லூரியை நான்விடும்
முன்பே புகையும் மதுவும்
புகுந்துகொண்டன என்னுள்
திருமணம் வரையில்
புகையை நான் விட்டேன்
புகை என்னை விடவில்லை
திருமணத்திற்குப் பின்பும்
மது மயக்குகிறது...
இன்றும் சுத்தமாய்த்தான்
யோசிக்கிறேன்
அமெரிக்காவில்...!
வெட்கக்கேடு - நானும்
ஓர் இந்தியன்!

Saturday, January 23, 2010

சுகவரி

ஆடை கலையாமல்
கூடிக் கலக்காமல்
தோள் சாய்ந்து
கட்டிக் கொள்ளுதல் - கூட
சுகம்தான் - காதல்
கரை கடந்தால்...

Thursday, January 14, 2010

பொங்கலோ பொங்கல்!

விவசாயம் மட்டுமே
தொழிலாய்ப் பார்த்த - நம்
முன்னோர்கள் - உழவுத்
தொழிலுக்கு உதவிய
கதிரவனுக்குக் காணும்
பொங்கலாய் - தை முதல்
நாளில் மங்கள மஞ்சள்
சூழ - கற்கண்டினும் இனிய
கருங்ககரும்பும் - தன்
அடி முதல் நுனி வரை
உதவும் வாழையையும்
வைத்து
அறுவடை செய்த புது அரிசி
குத்தி - மார்கழி கோலத்தில்
மணந்த சாணமும் பூசணியும்
இட்டு - அதிகாலை நேரத்தில்
ஆதவனை உள்ளம் குளிர்வித்து
துயில் எழுப்பி - அவன்
இன்முகம் நோக்கி மகிழ்ந்து
இரண்டாம் நாளில் - ஏர் சுமந்து
விதை விதைத்த எருதுகளை
குளிப்பாட்டி புது வண்ணம் இட்டு
பொங்கல் ஊட்டி துள்ளி திரிய
வைத்து
மூன்றாம் நாளில் - முந்தைய
தினங்களின் சோர்வு நீங்க
உறங்கி ஊர் சுற்றி
காளையர் கன்னியர்
கண் நோக்கி காதல்
கொண்டு பூப்பறிக்கும்
திருவிழா பார்த்து மகிழ
வைத்த திருவிழாவை
இன்று நாம் இணையத்தில்
மட்டும் வைத்து
இதயத்தில் இருந்து தொலைத்து
நாமும் கொண்டாடுகிறோம்
தமிழர் திருநாள்..! - அந்த
வரையில் நாம் இன்னும்
தமிழர்கள் தான்...!
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்..!

Thursday, December 31, 2009

௨௦௧௦ புத்தாண்டு வாழ்த்துக்கள்

இன்று போல் என்றும்

மகிழ்ச்சியாக எந்தப்

போராட்டத்தையும் எதிர்கொண்டு

தோல்வியையும் துரத்திவிட்டு

எந்தத் துக்கத்திலும்

துவளாமல் துடிப்போடு

இருப்போம் என்ற

உறுதி பூண்டு

நம் வாழ்வில்

இன்னோர் ஆண்டில்

இன்றொரு அடி வைப்போம்...

வாருங்கள் நண்பர்களே...

இந்த ௨௦௧௦ மட்டும் அல்ல

இனி வரும் எந்த ஆண்டும்

நமக்காக ஒரு கதவு

திறக்கும்...!

Wednesday, November 18, 2009

வாசகன்

ஒரு புதிய
புத்தகத்தை தீண்டும்
வாசகனாகிறேன் – நான்
உன்னை எண்ணிய
கணங்களிலெல்லாம்…

பூ மாரி

பூ மாரி பொழியுது
என்பார்கள் எங்கள் ஊரில்
புரியவில்லை எனக்கு - அது
அப்போது!
புரிந்து கொண்டேன்
எதிர்காற்றில் எங்கள்
மகிழ்வுந்தின் மீது
மழைச்சாரல் அடிக்கையில் - இப்போது..!

Wednesday, November 4, 2009

கானல் தேடல்

அந்தி மழையில்
அங்கமெல்லாம்
நனைந்து - உன்னைத்தேடி
ஓடிவந்தேன் நம் வீட்டினுள்
உன் முந்தானைத்
துவாலையில் - என்
தலை துவட்ட...
கதவைத் திறந்தபோது - தான்
உறைத்தது...
தலைப்பிரசவம் முடித்து
தாய் வீட்டில் - நீ
இருக்கிறாய் என்று!